குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த முதற்கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.
சவுராஷ்ட்ரா, தெற்கு குஜராத் பகுதிகளுக்கு உட்பட்ட 89 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிந்தது.
தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், 68 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, போர்பந்தரில் உள்ள வாக்குச்சாவடிகளில் புளூடூத் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை இணைத்து, முறைகேடு நடப்பதாக குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதவாடியா குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளதோடு, பாஜக மாபெரும் வெற்றி பெறும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.