காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 7 மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால், 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த சரிகா அதேபகுதியில் உள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு மேல் சரிகாவிற்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டயாலிசியஸ் சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அந்த சிறுமிக்கு திடீரென்று உடல் நிலை மோசமானதால், மதியம் 12 மணி அளவில், மருத்துவர் மேல் சிகிச்சைக்கு, சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். ஆனால் தொடர்ந்து பல மணி நேரமாக மாணவியை சென்னைக்கு அழைத்து செல்ல. ஆம்புலன்ஸ் வரவில்லை.
இதனால் சுமார் 7 மணி நேரமாக பெற்றோர் மருத்துவ மனையில் தவித்து வந்தனர். பலமுறை மருத்துவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தும், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த பின்னர், உடனடியாக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அந்த மாணவி சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டார் இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, விடுமுறை நாளில் விபத்துகள் அதிகம் என்பதால், ஆம்புலன்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சசிகலா விளக்கம் அளித்துள்ளார். வந்த ஆம்புலன்ஸும் வேறொரு நோயாளியை அழைத்து சென்றதால் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறுமி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த, மருத்துவபணிகள் இயக்குநருக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.