தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பள தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்திலேயே உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி மாவட்டம் முதலாவதாக இருந்து வருகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இந்தியா மட்டுமின்றி, பிற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலை நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஓகி புயலால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் உப்பளத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் இத்தொழில் முற்றிலும் முடங்கி உள்ளன. தற்போது உப்பளங்கள் மழைநீரால் நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் உப்பளத்தில் தொழில் துவங்குவதற்கு இன்னும் குறைந்தபட்சம் 3 மாதங்கள் கால அவகாசம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என உப்பள தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.