அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்த, சட்டதிருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்குமாறு, தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபாத் தாலூகாவில் உள்ள அனந்தலை கிராமத்தில், ஆதிதிராவிடர் வீட்டு வசதி நலத்திட்டத்திற்காக, அந்த கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்குமார் தொடர்ந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் கையகப்படுத்தும் அதிகாரியின் அறிக்கையை, மனுதாரருக்கு வழங்காமல், மாவட்ட ஆட்சியர் நிலத்தை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்ததாக நீதிபதி குறிப்பிட்டார். எனவே, நிலம் கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதி கூறினார்.
மேலும், அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது எந்த ஒரு குறைபாட்டிற்கும் இடம் அளிக்காத வகையில், மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தமிழக அரசை நீதிபதி வைத்தியநாதன் அறிவுறுத்தினார். மேலும், அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், சட்டதிருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு நீதிபதி யோசனை தெரிவித்தார் .