ஓகி புயலின் ஆக்ரோஷத் தாக்குதலில், கன்னியாகுமரி மாவட்டமே சிதைந்து சின்னபின்னமாகி கிடக்கும் நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் நிலை, என்ன என்பது தெரியாமல் தவிக்கிறது, கடலோர மீனவக் கிராமங்கள்.
உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எப்போது திரும்புவார்கள் என அவர்களது குடும்பத்தினர் காத்திருப்பது வழக்கமானதே. ஆனால், ஓகி புயல் சுழன்றடித்த வேளையில், தங்கள் வாழ்வாதாரம் தேடி, ஆழ்கடலுக்கு சென்ற, நூற்றுக்கணக்கான தமிழக மற்றும் கேரள மீனவர்கள், இன்னும் கரை திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியில் உறைந்துப்போயுள்ளனர் மீனவர்களின் உறவுகள். மாயமான மீனவர்களை மீட்கக்கோரி, கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னத்துறையில் நேற்று, மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் 10 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், பூத்தூரில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து, போராட்டத்தை மீனவர்கள் விலக்கிக்கொண்டனர்.
இதனிடையே, கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை தேட கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை ஆகியவை "ஆபரேசன் சினர்ஜி" என்ற பெயரில் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதுவரை 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஓகி புயலால் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கும் பணியில், அதிக அளவில் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த வேண்டும், என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். புயல் பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த ராஜ்நாத் சிங்கிடம், முதல்வர் இக்கோரிக்கையை முன்வைத்ததாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஓகி புயலால் ஆயிரம் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆனாலும், கடலுக்கு சென்ற மீனவர்கள், எப்போது கரை திரும்புவார்கள் என்ற ஏக்கத்துடன், உறவினர்கள் காத்திக்கிடப்பதால், குமரி மீனவ கிராமங்களில் சோகமே நிறைந்திருக்கிறது.