செவ்வாய், 8 மே, 2018

இந்தியாவில் முதல்முறையாக மிதிவண்டிகளுக்கான உயர்த்தப்பட்ட பிரத்யேக பாதை! May 7, 2018

Image

தலைநகர் டெல்லியின் வாகன எண்ணிக்கை ஒரு கோடி என்ற எண்ணிக்கையை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக மூச்சுவிடக் கூட சிரமப்படும் நிலையில் தான் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

காற்று மாசுபாட்டை தவிர்க்கும் பொருட்டு மரபு சாரா எரிசக்தியில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி டெல்லி மட்டுமல்லாது இந்தியாவும் பயணிக்கிறது.

டெல்லியில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியில் உள்ள தனது தொகுதியான சாஸ்திரி பார்க் (போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி) பகுதிக்கு சிக்னல் இல்லாத பிரத்யேக பாதை ஒன்றை அமைக்கக்கோரி பாஜகவைச் சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினரான மனோஜ் திவாரி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து ஆராய்ந்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தற்போது இத்திட்டத்திற்கு முதல் கட்ட அனுமதியை அளித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் முதல்முறையாக மிதிவண்டிகளுக்கான உயர்த்தப்பட்ட பிரத்யேக பாதை 4.8 கிமீ தூரம் கொண்ட கீதா காலனி - சாஸ்திரி பார்க் இடையிலான பகுதியில் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

யமுனா நதியையொட்டி அமையவுள்ள அக்‌ஷர்தாம் (டெல்லி) - சாஹ்ரன்பூர் (உத்தரப்பிரதேசம்) நெடுஞ்சாலைக்கு மேல் பகுதியில் இந்த உயர்த்தப்பட்ட பிரத்யேக மிதிவண்டிப்பாதை அமைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. நெடுஞ்சாலைக்கு மேல் இப்பாதையை அமைப்பதால் யமுனா நதிக்கு எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தாது. இப்பாதையில் எழில்மிகு தோட்டங்களும் அமைக்கப்படலாம், இதனை பாதசாரிகளும் பயன்படுத்தலாம், போக்குவரத்து பகுதியில் இருந்து இப்பாதை பிரிக்கப்பட்டிருப்பதால் விபத்தில்லா பகுதியாகவும் இது விளங்கும்.

கடந்த ஆண்டு சீனாவின் Funjian மாகானத்தில் உள்ள XIAMEN  நகரில் உலகின் மிக நீளமான மிதிவண்டிகளுக்கான பிரத்யேக உயர்த்தப்பட்ட பாதை செயல்பாட்டிற்கு வந்தது. இது 7 கிமீ நீளம் கொண்டது. இங்கு மிதிவண்டிகளுடன், எலக்ட்ரிக் பைக்குகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்சமயம் டெல்லியில் உள்ள பிரத்யேக மிதிவண்டிகளுக்கான பாதையானது கடந்த 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்ட போது அமைக்கப்பட்டது. எனினும், பல இடங்களில் வாகன போக்குவரத்துப் பாதைகளை ஒன்றுபட்டு செல்வதால் இதனை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மிதிவண்டி ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது அமைக்கப்படவிருக்கும் மிதிவண்டிகளுக்கான உயர்த்தப்பட்ட பிரத்யேக பாதையானது மிதிவண்டி ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். சாய்வுப்பாதைகள் மூலம் இந்த பிரத்யேக பாதை ஆங்காங்கே சாலைகளுடன் இணைப்பு பெற்றிருக்கும் என்பதால் இது வாகன நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts: