
காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் பிரதமராக பதவியேற்க உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் இடையே பெங்களூருவில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றால் நீங்கள் பிரதமராக பதவியேற்பீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி நான் ஏன் பிரதமராக பதவியேற்க கூடாதா? என எதிர் கேள்வி எழுப்பினார். பின்னர் 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயமாக நான் பிரதமராக பதவியேற்பேன் என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.