
ஊழலை ஒழிக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என காங்கிரஸ் கட்சியின் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவின் விஜய்புராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோனியா காந்தி, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 4 ஆண்டுகள் முடிந்துவிட்டதைச் சுட்டிக்காட்டினார். இருந்தும் ஊழலை ஒழிப்பதற்கான வாக்குறுதி என்ன ஆனது என்றும், லோக்பால் கொண்டுவரப்படாதது ஏன் என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை தான் ஒப்புக் கொள்வதாகக் கூறிய சோனியா காந்தி, ஆனால், வெறும் பேச்சால், ஏழைகளின் வயிறு நிரம்பிவிடுமா என்று கேள்வி எழுப்பினார்.
அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற மோடியின் முழக்கம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரு நடிகரைப் போல் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருவதாக அவர் விமர்சித்தார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது சோனியா காந்திக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால், பிரச்சாரத்தை பாதியில் முடித்துக் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டதில்லை.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.