
கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவு காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஹவாயின் மவுனா லோவா ஆய்வகத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு இதுவரை எப்போதுமே இல்லாத அளவு அதிகரித்துள்ளது கடந்த ஏப்ரல் மாதம் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உலகின் வெப்பநிலை சீராக அதிகரித்து வருகிறது. காற்று மண்டலத்தில் சேரும் கார்பன் டை ஆக்சைடின் மாதாந்திர செறிவு கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக மில்லியனில் 410.31 பகுதிகளாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
1956 முதல் செயல்பட்டு வரும் ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் கடலாய்வுகள் நிறுவனத்தின் தரவுகள் மற்றும் 1974 முதல் செயல்பட்டு வரும் தேசிய கடல் மற்றும் காற்று மண்டல மேலாண்மை நிறுவனத்தின் தரவுகள் அடிப்படையில் ஹவாயின் மவுனா லோவா ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளில், காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. ஹவாயின் மவுனா லோவா ஆய்வகம் இது தொடர்பாக ஆய்வு நடத்த தொடங்கியதில் இருந்து இதுவரை மில்லியனில் 90 பகுதிகள் அளவு கார்பன் டை ஆக்சைடின் செறிவு கூடியுள்ளது.
பனிக்கட்டிகளில் இருந்து வெளிவரும் காற்றுக்குமிழிகளில் இருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை அடிப்படையாகக் கொண்டு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவை கணக்கிட்டுள்ள விஞ்ஞானிகள், தற்போது இந்த அளவு உச்சத்தில் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
கார்பன் டை ஆக்சைடு வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் பண்பை உடையது என்பதால் புவியின் புறப்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பனிப்பாறைகள் உருவதற்கு முதன்மை காரணங்களில் ஒன்றாக அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது.
படிம எரிபொருட்களை எரித்தல், தொழிற்சாலை புகை வெளியேற்றம் மற்றும் பிற பொருட்களை எரித்தல் உள்ளிட்டவை கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கு காரணமகா உள்ளது. கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொள்பவையாக உள்ள மரங்களின் அளவும் குறைந்து வருவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும் காற்று மண்டலம் மேலும் சீர்கெட்டு வருகிறது.