2020- 21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் அல்லது நிதி அறிக்கை என்பது வரும் ஆண்டுக்கான இந்திய அரசின் வரவு, செலவுகளை திட்டமிடுவதற்கான அறிக்கையாகும். இந்தியாவில் முதன்முறையாக பிரிட்டிஷ் ஆட்சியில் 1869ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
credit ns7.tv
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 112-வது சட்டப் பிரிவில் பட்ஜெட் தாக்கல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், கடந்த ஒரு ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
பிரதமர் மோடியின் இரண்டவது அமைச்சரவையில், நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீத்தாராமன், தனி பொறுப்பாக நிதித்துறையை நிர்வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இந்திரா காந்திக்குப் பின்னர் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையும் கடந்த ஆண்டு நிர்மலா சீத்தாராமனுக்கு வந்து சேர்ந்தது.
அடுத்த ஓராண்டுக்கான நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் மத்திய பட்ஜெட்டை, இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீத்தாராமன், தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் மூத்த நிதித்துறை அதிகாரிகள் என 12 பேர் கொண்ட குழுவின் தலைமையில், நூற்றுக்கணக்கான நிதிதுறை ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி தயாரித்துள்ளனர்.
மிகவும் ரகசியமாக வைக்கப்படும் பட்ஜெட் குறித்த தகவல்கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொதுத்தளத்தில் வெளியிடப்படும்.
இந்த பட்ஜெட் தாக்கல் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கடந்த பட்ஜெட் உரையின், வரி அறிவிப்பின் போது, ஒரு அரசு வரி வசூலிக்க பின்பற்ற வேண்டிய முறையை, தமிழ் இலக்கியமான புறநானூறில் உள்ள பிசிராந்தையாரின் பாடல் வழியே எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.