கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தியாவிலிருந்து N-95 ரக முகக் கவசத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ளது.
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் மாஸ்க் அணிந்துவரும் நிலையில், N-95 ரக முகக்கவசங்கங்களுக்கு சீனாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் பாலிதீன் பைகள், குடிநீர் குடுவைகள், உள்ளாடைகள் போன்றவற்றை முகக்கவசங்களாக அணிந்து கொள்ளும் நிலை உருவானது.
தற்போது தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலிருந்து, சீனா உள்ளிட்ட பிறநாடுகளுக்கு முகக்கவசங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால், தட்டுப்பாடுக்கு ஏற்ப அதன் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக, N-95 ரக முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
முகக்கவச ஏற்றுமதிக்கான தடை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த ஏற்றுமதி கொள்கையில், மத்திய அரசு திருத்தமும் மேற்கொண்டுள்ளது. முகக்கவசம் மட்டுமின்றி மருத்துவ பாதுகாப்பு கவச உடை ஏற்றுமதிக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக கவசங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மறுஉத்தரவு வரும் வரை மாஸ்க் ஏற்றுமதிக்கான தடை தொடரும், என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
credit ns7.tv