தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக, 25ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மதுரை, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி , கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழை, 27ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம் சுட்டெரிக்கும்
தமிழகத்தின் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். இதன்காாரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வெளியில் அநாவசியமாக வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மழைப்பதிவு
மார்ச் 1 முதல் ஏப்ரல் 23ம் தேதிவரையிலான கால கட்டத்தில் சென்னை, கோவை, பெரம்பலூர், உள்ளிட்ட பகுதிகளில் இயல்புநிலையை விட அதிகமான மழை பதிவாகியுள்ளது.
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால், விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
credit indianexpress.com