கோரிக்கை 1: உடனடியாக 1000 கோடி தேவை
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருந்து மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக 1000 கோடி ரூபாய் விடுவிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோரிக்கை 2: பஞ்சாயத்து செயலாளர்கள் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நேரடியாக பணமாக பஞ்சாயத்து செயலாளர்கள் மூலம் ஊதியம் வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் வங்கிகளில் கூட்டம் சேருவது தவிர்க்கப்படும் என பிரதமரிடம் தனது யோசனையை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோரிக்கை 3: உணவு தானியங்கள் இலவசமாக வேண்டும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக கூடுதல் உணவு தானியங்களை இலவசமாக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை 4: சிறு குறு நிறுவனங்களுக்கு சலுகைகளை நீட்டிக்க வேண்டும்
தமிழகத்தில் அதிக அளவு சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக, சிறு குறு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கோரிக்கை 5: வட்டியை 6 மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும்
சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களுக்கான வட்டியை 6 மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோரிக்கை 6: ஜிஎஸ்டி வரியை 6 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்
சிறு குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் முன்கூட்டிய ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி செலுத்துவதை 6 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கை 7: போக்குவரத்து மானியத்தை அறிவிக்க வேண்டும்
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு கொண்டு சென்று தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் அவர்களுக்கு போக்குவரத்து மானியத்தை அறிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கை 8: அதிக எண்ணிக்கையில் பிசிஆர் கருவிகளை வழங்க வேண்டும்
தினமும் 10,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ள முதல்வர், அதற்கு ஏற்ற வகையில் தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் பிசிஆர் கருவிகளை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் பெருமிதம்
கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழக அரசின் நடவடிக்கையால் 1.2 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 54 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள ஃபேக்சில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
credit ns7.tv