credit ns7.tv
Isolation என்ற வார்த்தை இன்று மிகவும் பிரபலமாக விளங்குகிறது. தனிமைப்படுத்துதல் என்ற அர்த்தத்திலான இந்த சொல் வட கொரியாவுக்கு அதிகம் பொருந்தும். ஒட்டுமொத்த உலகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக வட கொரியா விளங்குகிறது, இதற்கு காரணம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
36 வயதான கிம் ஜாங் உன், வட கொரியாவினை, சர்வாதிகாரப்போக்குடன் ஆண்டு வருவதாக சர்வதேச நாடுகளால் பார்க்கப்படுகிறது. அணு ஆயுத சோதனைகளை அவ்வப்போது நிகழ்த்தி உலக வல்லரசான அமெரிக்கா உட்பட உலக நாடுகளையும் மிரள வைத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய உடல்நலன் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி சர்வதேச சமூகத்தை பரபரப்பாக்கியுள்ளது.
கடந்த ஏப் 11ம் தேதிக்கு பிறகு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும், அதன் பின்னர் அவருடைய உடல் நலன் மோசமடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. உயிருடன் இல்லை என்றும் கூறப்பட்டது.
இதுவரையில் அவருடைய உடல்நலன் குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், அண்டை நாடான தென் கொரியா தற்போது ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், உயிருடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தென் கொரிய தேசிய பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் மூன் சங் இன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் வொன்சான் நகரில் இருப்பதாகவும், இதுவரை சந்தேகத்திற்கு இடமான நகர்வுகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் கடந்த சில நாட்களாக கிம் ஜாங் உன் குறித்து வெளியான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பப்படுகிறது.