ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தற்போதைக்கு தளர்வுகள் எதுவும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு, எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்குவது குறித்து, மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என, கடந்த 15 ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தளர்வுகள் தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை மீது அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரனோ பரவுவதை தடுக்க, தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும், மே 3 ஆம் தேதி வரை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகள் மற்றும் இதர சேவைகளுக்கு அரசு ஏற்கனவே அறிவித்த விதிவிலக்குகள் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, வல்லுனர் குழுவின் ஆலோசனைகளை பெற்று, சூழலுக்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
credit ns7.tv