தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் எட்டு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது.
திருச்சி, கரூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், சேலம் மற்றும் வேலூரில் 103 டிகிரியும், தருமபுரியில் 102 டிகிரியும், நாமக்கல்லில் 101 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில், உள்மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தோவாளை, ஆரல்வாய்மொழி, கொட்டாரம், சுசீந்தரம், பூதப்பாண்டி, கீரிப்பாறை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
credit ns7.tv