ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

வெப்பநிலை குறைவாக உள்ள இடங்களில் அதிக பேருக்கு வைரஸ் பரவுகிறது : ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்

credit ns7.tv
Image
குறைவான வெப்பநிலை உள்ள இடங்களில் தான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதாக சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பொது சுகாதாரத்துறை இதழில் வெளிவந்துள்ள சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சச்சின் குந்தேவின் ஆய்வுக் கட்டுரையில், உலகம் முழுவதும் உள்ள 85 நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1.7 லட்சம் பேரின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில், வெப்பநிலை குறைவாக உள்ள இடங்களில் அதிக பேருக்கு வைரஸ் பரவி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

3 டிகிரி செல்சியஸ் முதல் 12 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் தான் அதிக நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் குறைந்த அளவிலேயே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரிய வெப்பம் அதிகமாக உள்ள இடங்களிலும், புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகம் உள்ள இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும், செயற்கையாக புற ஊதாக் கதிர்வீச்சுகளை உருவாக்குவதன் மூலம் சமூகப் பரவலை தடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கலாம் என்றும் சென்னை ஐ.ஐ.டி. மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

புள்ளி விவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வில் வெப்பநிலை குறைவாக உள்ள இடங்களில் தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளதால், அடுத்த கட்டமாக உடலியல் ஆய்வை மேற்கொண்டால் மட்டுமே இதை நிரூபிக்க முடியும் என்றும் சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.