கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் மே 3-ம் தேதிக்குப் பிறகு 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்தபோது கூறியபடி, நிலைமைகளுக்கு ஏற்ப ஏப்ரல் 20-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டில் சிலர் தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகள் ஏதும் இல்லாமல் மே 3-ம் தேதி வரை மேலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், மொபைல் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி பழுதுபார்ப்பு கடைகள் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதோடு, ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டு தொடக்கம் என்பதால், நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களுக்கான புத்தகக் கடைகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், வனத்துறை சார்ந்த பணிகள், விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பணிகளில் சேமிப்புக் கிடங்குகள், ஆய்வகங்கள் இயங்குவதற்கும், மாநிலங்களுக்கு இடையே விவசாயம் சார்ந்த பொருள்களைக் கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்கும் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மத்திய அரசின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து சில பணிகளுக்கு விலக்கு அளித்து செயல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணியில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பணியில் ஈடுபடுவோர் தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறித்ததைப் போல, தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, கட்டுமானம், சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் விநியோகம், சுகாதாரம், செங்கல் சூளை பணிகள், மருத்துவமனை கட்டுமானப் பணிகள், மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகள், மின்சாரத் துறைப் பணிகள் உள்ளிட்டவை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ளும்போது, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
credit indianexpress.com