இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் இதன் தாக்கம் ஏறுமுகத்திலேயே உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி மட்டும் 76 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது.
இதில், சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 55 பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டு, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில், சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 134 பேருடன் கோவை 2ம் இடத்திலும், 109 பேருடன் திருப்பூர் 3ம் இடத்திலும் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அரசின் நடடிக்கைகள் ஊடகங்களுய்க்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தமிழகத்தில் கொரொனா வைரஸ் பாதிப்பு நிலவரங்கள் குறித்ஹ்டு தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் இதுவரை 2,10,538 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். நேற்றுவரை தமிழகத்தில் 1,08,337 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை 87,159 பயணிகள் 28 நாள் குவாரண்டைனை முடித்துள்ளனர். இதுவரை 1,09,972 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த 145 அறிகுறி உள்ள பயணிகள் விமான நிலையங்கள் அருகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 1,917 மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 53,045 மாதிரிகள் எடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,596 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில் 43,582 மாதிரிகளில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இன்னும் 1,990 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 5,877 ஒரே நபர்களின் மாதிரிகள் திரும்ப திரும்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றுவரை தமிழகத்தில் 22,254 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அரசின் கொரோனா வார்டு தனிமைப்படுத்தலில் 145 பேர் உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 33 கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. நேற்று முதல் இன்றுவரை 6,060 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இல்லாமல் 940 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இன்று கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர உயிரிழந்தார். மேலும், மற்றொருவர் கொரோனா வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்தபிறகு வேறு தொற்றுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.” என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாளில் இருந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக முதல்வர் பழனிசாமி என கொரோனா பாதிப்பு மற்றும் அரசு நடவடிக்கைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தனர். இடையில், 2-3 நாட்கள் மட்டுமே சுகாதாரத்துறை சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது. சென்னையில் ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு தவிர்க்கப்பட்டு செய்திக் குறிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.