செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ரமலான் தொழுகைக்கும் மெக்காவில் அனுமதி இல்லை - சவுதி அரசு!

ஏப்ரல் மாதம் 24ம் தேதி ரமலான் மாதம் துவங்குகிறது. இஸ்லாமியர்கள் இந்த மாதத்தில் நோம்பு இருந்து மாதத்தின் இறுதியில் ரமலான் பண்டிகையை கொண்டாடுவார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதீனா புனித இடங்களுக்கு சென்று தொழுகை செய்ய வேண்டும் என்பது மத நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் கடந்த மாதத்தில் சவுதி அரேபிய மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டது. ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு யாரும் மெக்கா மற்றும் மெதினாவுக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளது.
இன்னும் 3 தினங்களில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் மெக்கா, தொழுகைக்காக திறக்கப்படுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சவுதி அரேபிய மதகுரு ஷேக் அப்துல்லா அல் ஷேக் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் “மசூதிகள் திறக்கப்படாது என்றும், மக்கள் தங்களின் வீடுகளிலேயே நோன்பினை மேற்கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் கொரோனாவால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உள்நாட்டு மக்களுக்கும் மெக்காவில் பொது வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.