வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கியுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள்!

கோவில்பட்டி பகுதியில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும்  ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட முழுநேர இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. 
இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு, இந்த தொழிலை நம்பியுள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்தனர். இதன் காரணமாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.  
வேலையின்றி தவிக்கும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் பற்றி நியூஸ் 7 தமிழிலும் செய்தி வெளியானது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகளுடன் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. 
இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு ,கிருமிநாசினியை கொண்டு கை கழுவிய பின்னரே தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் பெண்களை அவர்கள் வாழும் பகுதியில் இருந்து வாகனங்களில் அழைத்து வந்து வேலைக்கு அமர்த்தி வருகின்றனர். 
தற்போது 100% பெரிய,  சிறிய என அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கத் துவங்கியுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
credit ns7.tv