ஆந்திரப் பிரதேச ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரா ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனுக்கு விரைவில் கொரோனா.
ஆந்திரப் பிரதேச ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரா ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனுக்கு விரைவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திரா ஆளுநரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவருக்கும் ஆளுநர் மாளிகை செவிலியர், சமையலர், மற்றும் வீட்டுப் பணியாளர் ஒருவர் என 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திரா சுகாதாரத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், “நாங்கள் அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். அதன் அடிப்படையில், ஆளுநர் அலுவலகத்திலும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். அங்கே பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.” என்று கூறுகின்றனர்.
ஆந்திராவின் ஆளுநர் மாளிகையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 3 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பின்னமநேனி சித்தார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஊடகங்களிடம் கூறுகையில், “ நான் கொரோனா பாதிக்கப்பட்ட எந்த நாடுகளுக்கும் பயணம் செய்யவில்லை. வெளியே எங்கேயும் செல்லவில்லை. தாங்கள் ஆளுநருடன் பணிபுரிவதால் எங்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எங்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது எங்களுக்கு தெரியும்” என்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் செவிலியர் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள், யாரும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்யவோ அல்லது ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாததால் ஆந்திர மாநில சுகாதாரத்துறைகள் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
ராஜ் பவனில் குறைந்தபட்சம் 12 பேர் கொண்ட ஒரு மருத்துவக் குழு பணி புரிகின்றனர். அவர்கள் அனைவரும் பொது முடக்கம் தொடங்கியதிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியைத் தவிர, மீதமுள்ள மூவரும் சமீப காலங்களில் ராஜ் பவனில் இருந்து வெளியே சென்றதாகத் தெரியவில்லை. அந்த அதிகாரி சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் பயணம் மேற்கொண்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவின் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநருக்கும் விரைவில் கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
credit indianexpress.com