வியாழன், 30 ஏப்ரல், 2020

டெல்லியின் கோயம்பேடு’ - ஆசாத்பூர் காய்கறிசந்தையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

credit ns7.tv
Image
சென்னையில் உள்ள கோயம்பேடு போலவே டெல்லியில் ஆசாத்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாக சொல்லப்படுகிறது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, தலைநகர் டெல்லியிலும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனிடையே டெல்லி ஆசாத்பூர் காய்கறி சந்தையில் இதுவரை 11 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 4 வியாபாரிகளுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆசாத்பூர் காய்கறி சந்தையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் இந்த காய்கறி சந்தையில் வியாபாரம் பார்த்து வந்த 57 வயதுடைய கமிஷன் ஏஜெண்ட் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் இச்சந்தையில் உள்ள பல கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கிருமிநாசினி தெளித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதேவேளையில் போதிய காய்கறிகள், பழங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான விநியோகம் தடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காய்கறி சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.