வியாழன், 23 ஏப்ரல், 2020

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் - கேரள அரசு அதிரடி

 கொரோனா வைரஸை விரட்டும் பணியில் உலக நாடுகள் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறது. இந்தியா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நிலையை ஓரளவு கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து தொடர்ந்து மீண்டு, மற்ற மாநிலங்களுக்கு சிறந்த முன்னோடியாக செயல்பட்டு வருகிறது நம்முடைய அண்டை மாநிலமான கேரளா. ஏற்கனவே மத்திய அரசு, எம்.பி.க்கள் அனைவருக்கும் ஒரு வருடத்திற்கு 30% சம்பள பிடித்தம் செய்யப்படும் என்றும், தொகுதி நிவாரண நிதி கிடையாது என்றும் அறிவித்திருந்தது.

தற்போது அதே பேட்டர்னை ஃபாலோ செய்துள்ளது கேரள அரசு. அடுத்த ஒரு வருடத்திற்கு கேரள எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.
அரசு அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் அடுத்த 5 மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கேரள அரசின் வாரியங்களில் பணியாற்றும் நிர்வாகிகள், உள்ளூர் பஞ்சாயத்து அமைப்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தலைவர்களின் சம்பளத்திலும் 30% பிடித்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.