நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.
தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டார்.
இதுகுறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், “சிக்கித் தவிக்கும் இத்தகைய குழுக்கள் ஊர்செல்வதற்கான போக்குவரத்திற்காக பேருந்துகள் மட்டும் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும். இருக்கைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
லாக் டவுனில் சொந்த ஊர் செல்வதற்கான உத்தரவில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது, “லாக் டவுன் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்கான நிபந்தனைகள் எவை எவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி , அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதற்கான திட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பான நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அத்தகைய சிக்கித் தவிக்கும் நபர்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்கும் நிலையான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். சிக்கித் தவிக்கும் நபர்களை தங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குள் அதிகாரிகள் பதிவு செய்வார்கள்.
சிக்கித் தவிக்கும் நபர்களின் குழு, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் இடையில் செல்ல விரும்பினால், அனுப்பும் மற்றும் பெறும் மாநிலங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து சாலை வழியான இயக்கத்திற்கு பரஸ்பரம் ஒப்புதல் அளித்துக்கொள்ளலாம்.
சொந்த இடங்களுக்குச் செல்லும் நபர்கள் பரிசோதனையிடப்பட்டு, கொரோனா தொற்று நோய் அறிகுறியற்றவர்களாக இருப்பவர்கள் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.
பேருந்து போக்குவரத்துப் பாதையில் வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அத்தகைய நபர்களைப் பெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செல்ல அனுமதிக்கும்.
சொந்த இடங்கள் செல்லும் நபர்கள் இலக்கை அடைந்ததும், அத்தகைய நபர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். மேலும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். மதிப்பீட்டில் நபர்களை நிறுவன தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் அவர்கள் அவ்வப்போது சுகாதாரப் பரிசோதனைகளுடன் கண்காணிக்கப்படுவார்கள்'” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.