கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மீன்கள் மற்றும் மீன் உணவுகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் வகையில் தமிழக மீன் வளத்துறை புதிய மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாங்கள் விரும்பிய உணவுகளை வாங்கி உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மட்டும் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்னையில் மீன் விற்பனையை பொறுத்தவரை ஊரடங்கு காரணமாக அதிக அளவில் தடைபட்டுள்ளது. மக்கள் இந்த காலகட்டங்களில் மீன் வாங்க வேண்டும் என்றால் காசிமேடு, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே சென்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பொதுமக்கள் அனைவருக்கும் மீன்கள் எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக மீன்வளத்துறை புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்களும், மீன் பிரியர்களும் மீன் வாங்க வேண்டும் என்றால் போனை ஒரு கிளிக் செய்தால் போதும் உங்கள் வீடுகளுக்கே மீன்கள் தேடி வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கென மீன்கள் என்ற பிரத்யேக மொபைல் செயலியையும் www.meengal.com என்ற இணையதளப்பக்கத்தையும் தமிழக மீன்வளத்துறை உருவாக்கியுள்ளது.
சென்னையில் முதல் கட்டமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை, சாந்தோம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இந்த செயலி வழியாக காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை மீன்கள் மற்றும் மீன் உணவுகளை ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே வந்து வினியோகம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இணைய சேவை மற்றும் செயலி மூலம் ஆர்டர் செய்ய முடியாதவர்கள் 044-24956896 என்ற தொலைபேசி எண்ணிற்கும் அழைத்து ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த சேவையை சென்னையின் அனைத்துப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தமிழக மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv