கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு ஊரடங்கால் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியுள்ளன. இதனால் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருவதாகவும் இந்த இக்கட்டான சூழலிலும் வங்கிகள் வழக்கம் போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் உலகளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருவதாக தெரிவித்த அவர் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கையிருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா பாதிப்பால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிப்பதாகவும் உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிறு, குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்காக மற்றும் அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் எனவும் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறு குறு தொழில் நிறுவனங்களின் நலன் கருதி வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வங்கிகளின் வழக்கமான சேவைகளும் தங்குதடையின்றி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக தெரிவித்த சக்தி காந்ததாஸ் தற்போதைய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதோடு சரிவில் இருந்து மீள்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
credit NS7.tv