ஊடகப் பணியாளர்கள் உட்பட மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் பணியை, அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும்,பதற்றத்தையும் அதிகப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே போர்க்கால அடிப்படையில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஊரடங்கின் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து, மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
credit ns7.tvv