திங்கள், 20 ஏப்ரல், 2020

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!

பொதுமக்களுக்கு சமைத்த உணவு, மளிகை மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், 48 மணி நேரத்திற்கு முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, 48 மணி நேரத்திற்கு முன்னதாக, மாநகராட்சி மண்டல அலுவலர்களிடம் தகவல் தெரிவித்த பின்னரே உணவு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அந்த இடத்தில் உணவு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல எல்லைக்குட்பட்ட இடத்திலேயே உணவை தயாரிக்க வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட இடத்தில் உணவு வழங்கக் கூடாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
உணவு வழங்கும் இடத்தில் மூவர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், உணவு வழங்கும்போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
credit ns7.tv