வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மே மாதம் 3 ஆம் தேதிக்கு பின்னர் 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி!

தமிழகத்தில் மே மாதம் 3-ஆம் தேதிக்கு பின்னர் 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் தொழில்துறையில் சில விலக்குகள் அளிப்பது தொடர்பாக, அந்தந்த மாநில முதல்வர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு வல்லுநர் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பணியில் ஈடுபடுவோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக பகுதிகளில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகள், சாலை,குடிநீர், மேம்பாலம், மின்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளலாம் எனவும் அரசு கூறியுள்ளது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களைக் கொண்டு இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் சிவப்பு மாவட்டமாக கருதப்படும் பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பணிகள் நடைபெறும் இடத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

credit ns7.tv