வியாழன், 30 ஏப்ரல், 2020

இந்தியாவில் 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால், பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்: ரகுராம் ராஜன்

இந்தியாவில் 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால், பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். 
கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் ஆலோசித்தார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், கொரோனா பிரச்சினையால் வேலையிழந்து வறுமையில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க, உடனடியாக 65ஆயிரம் கோடி ரூபாய் தேவை என கூறினார். 


லாக்டவுனை தொடர்ந்து நீட்டிக்காமல், பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வழியைத் தேட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். லாக்டவுனை முடிக்க மத்திய அரசு தீர்மானித்தவுடன், முதலில் மக்களின் உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க, மரபுகளையும், விதிமுறைகளையும் மீறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும்,  இந்தியாவில் நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுவதாகவும், அதை 5 லட்சம் என்ற அளவில் உயர்த்த வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.