வெள்ளி, 17 ஏப்ரல், 2020

விழுப்புரத்தில் இருந்து காணாமல் போன கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த நபரை, போலீசார் ஒருவார கால தீவிர தேடலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு கண்டுபிடித்தனர். அந்த டெல்லி நபரை போலீசார் எப்படி தேடிப்பிடித்தனர் என்பது ஒரு த்ரில்லர் சம்பவம் போல நடந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 32 வயது நபர் சுனில் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த பட்டதாரி. இவர் கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தார். இவர் சில நாட்களிலேயே கார் திருடியதாகவும் விபத்து ஏற்படுத்தியதாகவும் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, புதுச்சேரி ரயில் நிலையத்திலும் ராஜ் நிவாஸிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக சுனில் மீது போலீசார் மீண்டும் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து விசாரித்தபோது, சுனில் சிறைக்குள் இருந்து ரவுடிகளின் மொபைல் போனைப் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைக் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் காவல்துறை மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சிறை அதிகாரிகள் புதுச்சேரி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தி சிறையில் கைதிகள் பயன்படுத்திவந்த அனைத்து மொபைல் போன்களையும் கைப்பற்றினர்.
இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் சுனிலை சிறைக்குள் கடுமையாகத் தாக்கினர். ஒருவழியாக, கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ம் தேதி சுனிலுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஜாமீனில் வெளியே வந்த சுனில் புதுச்சேரியில் தங்கியிருந்துவிட்டு மார்ச் 21-ம் தேதி வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் மூலம் டெல்லிக்கு செல்ல முடிவெடுத்து விழுப்புரத்துக்கு வந்தார். ஆனால், பொது முடக்கத்தால் அவர் டெல்லிக்கு செல்ல முடியவில்லை. இதனால், அவர் லாரிகள் நிறுத்தும் பகுதியில் லாரி ஓட்டுநர்களுடன் சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்து அவர்களுடன் இருந்தார்.
இதனிடையே, டெல்லி பயண வரலாறு உள்ளவர்களை சரிபார்க்கும் நடவடிக்கையாக கோவிட்-19 பரிசோதனைக்கு சுனிலை போலீசார் அழைத்துச் சென்றனர். சுனிலுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்ப பரிசோதனையில் நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்தது. இதையடுத்து, அவர் ஏப்ரல் 7-ம் தேதி 25 பேருடன் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டார்.
ஆனால், அன்று மாலையில் வந்த 2வது பரிசோதனை அறிக்கையில், சுனில் மற்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யபட்டது. உடனடியாக, கொரொனா பாதிப்புக்குள்ளான உள்ளூர்வாசிகள் அந்த 3 பேரும் சுகாதாரப் பணியாளர்களால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், சுனிலை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் காணாமல் போனார். சுனில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
கொரோனா நோயாளி மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சுனில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்லவில்லை. தவறுதலாக அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டார் என்று கூறி அந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு, கொரோனா பாதிக்கப்பட்ட சுனிலை கண்டுபிடிப்பது என்பது சுகாதாரப் பணியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் சிக்கலானது.
இதையடுத்து, கொரோனா நோயாளி சுனிலை கண்டுபிடிப்பதற்காக போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதலைத் தொடங்கினர். சுனில் விழுப்புரம் மாவட்டத்தைவிட்டு வெளியே சென்றிருக்கலாம் என்று யோசித்த போலீசார் அவர் எங்கெல்லாம் சென்றிருக்கலாம் என்று யோசித்து அவரைத் தேட ஒரு திட்டத்தை உருவாக்கினார். தனிப்படையில் ஒரு பிரிவினரை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுனிலைப் பற்றி விவரங்களை மூன்று மொழிகளில் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பொது இடங்களில் ஒட்டினர். ஆனாலும், போலீஸாரால் சுனிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு லாரி டிரைவர் மதுராந்தகம் அருகே படாலம் பகுதியியில் கொரோனா பாதித்த சுனிலை அடையாளம் கண்டார். அவர் அந்த லாரியிலேயே இருந்தார். உஷாரான லாரி டிரைவர் தகவல் அளித்ததன் பேரில் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுனிலைப் பிடித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே, சுனிலுடன் தொடர்பில் இருந்த 4 பேரை பிடித்த போலிசார் அவர்களை சுகாதாரப் பணியாளர்களுடன் மருத்டுவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரிடம் இருந்து ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டன.
காணாமல் போன கொரோனா பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த சுனிலைக் கண்டுபிடித்தது குறித்து விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், “நாங்கள் அவரை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் தவறான செல்போன் எண்ணையும் தவறான முகவரியையும் கொடுத்திருந்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றதும் அன்று இரவே அவர் லாரி மூலம் படாலம் சென்றுவிட்டார். எங்களுக்கு தெரிந்தவரை சுனிலுடன் வேறு யாரும் தொடர்பில் இல்லை. ஆனால், இதில் ஒரு பெரிய சந்தேகம் உள்ளது. சுனிலுக்கு எங்கே யாரிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.” என்று கூறினார்.
கொரோனா பாதிக்கப்பட்ட சுனில் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.