ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது குறித்து உரிய ஆணைகள் வெளியிடும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவான மற்றும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி முடிவெடுக்க வல்லுநர் குழுவை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழு, முதற்கட்ட கூட்டத்தை நடத்தி முதலமைச்சரிடம் நாளை ஆலோசனைகளை தெரிவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வல்லுநர் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
credit ns7.tv