செவ்வாய், 21 ஏப்ரல், 2020

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை

Authors
Image
உயிர் காக்கும் மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது, மனிதம் மரித்துப்போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.
கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள். ஆனால் அறிவார்ந்த தமிழகத்தில் கொரோனாவால் அவலங்கள் நடந்தேறி வருகிறது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆந்திர மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பப்பட்ட சடலம் பின்னர் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 
நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடாவில் பணியாற்றி டெங்கு காய்ச்சலுக்கு பலியான  மருத்துவர் ஜெயமோகனின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய கோவை சிறுமுகை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மருத்துவரின் தாயார் தற்கொலைக்கு முயன்றார். இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதால், பாதிப்பு ஏற்படாது என நியூஸ் 7 வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டது. 
இந்த நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு பலியான, நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை,  கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது உடலை அடக்கம் செய்ய வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.  இதனால் மருத்துவர் சைமனின் உடல் உடல் வேலங்காடு இடுகாட்டில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பாக நியூஸ் 7 தமிழில் பகல் பதிப்பி முக்கிய செய்தியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த மருத்துவர்கள், மக்களின் அறியாமையை வெளிச்சம்  போட்டுக் காட்டியதோடு, மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
credit ns7.tv