திங்கள், 29 ஜூன், 2020

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை!

தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து உள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட வனபகுதிகள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கால் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

 

உலகில் 9 வகையான புலிகள் உள்ளன. இதில் இந்தியாவில் உள்ள புலிகளை பெங்கால் டைகர் என குறிப்பிடப்படுகிறது. புலிகள், அவற்றில் தோல், பல் மற்றும் நகத்திற்காக வேட்டையாடபட்டதால் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும் புலி இந்தியாவின் தேசிய விலங்கு என்பதால் அதனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தற்போது இந்தியாவில் 3 ஆயிரம் புலிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

 

2006-ல் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 264ஆக அதிகரித்து உள்ளது. அதில் முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. முதுமலையில் 80 புலிகளும், ஆனைமலையில் 40 புலிகளும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 60 புலிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் ஜீலை 29ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடபட்டு வருகிறது. இந்த நாளில் புலிகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் நன்மைகள், உணவு சங்கிலி சமநிலை அகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.