சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, 10ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, இதற்கு முன்னர் நடத்தப்பட்ட 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என தெரிவித்தார். ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 12ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்தார். தேர்வு வேண்டாம் என முடிவெடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு, இதற்கு முன்பாக நடத்தப்பட்ட 3 தேர்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான மதிப்பெண் பட்டியல் வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனாவை கருத்தில் கொண்டு ஜூலை 26-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை ஒத்திவைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக ஜூலை மாதம் தொடங்கவிருந்த CBSE பொதுத்தேர்வுகள் மற்றும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை, மத்திய மேம்பாட்டு அமைச்சகம் ஒத்திவைத்தது. ஆகஸ்ட் மாதம் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்ற மருத்துவ வல்லுனர்களின் கணிப்பை அடுத்து, நீட் மற்றும் JEE மெயின் தேர்வுகளையும் ஒத்திவைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒத்திவைத்துள்ளது. நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவர்களும், JEE மெயின் தேர்வுக்கு 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் விண்ணிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.