திங்கள், 29 ஜூன், 2020

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் இது புதிதல்ல

Arun Janardhanan 

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நீதிவிசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன்பும், இந்த போலீசார் , பலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதில் ஒருவர் மரணமடைந்து இருப்பதாக, சிலர் சாட்சி அளித்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும், போலீஸ் விசாரணையிலேயே துன்புறுத்தப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதோடு மட்டுமல்லாது, இந்த விசாரணை அறிக்கையையும் நீதிபதி, கடந்த 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள், 30ம் தேதிவாக்கில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது மாவட்ட நீதிபதி சரவணன், சாத்தான்குளம் காவல்நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சை தவிர்த்து மற்ற துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் குறித்தும் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சாத்தான்குளம் காவல்நிலையத்தில், ஒரு மைனர் உட்பட 8 பேர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துன்புறுத்தல் 3 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. போலீஸ் நண்பர்கள் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் ஸ்டேசன் அதிகாரிகள் இந்த பாதகச்செயலை அரங்கேற்றியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துன்புறுத்தல் நடவடிக்கைகளில் சப் இன்ஸ்பெக்டர்களான பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷின் பங்கு அதிகம் என்றும், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் உத்தரவின் பேரிலேயே இந்த துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் விவகாரம் தொடர்பாக இம்மூவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பாக, இந்த போலீஸ் ஸ்டேசனில், துன்புறுத்தல் காரணமாக மகேந்திரன் என்பவர் மரணமடைந்தார். போலீசாரின் விசாரணையிலேயே இவர் மரணமடைந்ததாக தகவல் பரவியநிலையில், அவரது சகோதரர் துரை கைது செய்யப்பட்டார்.
மகேந்திரன் போலீஸ் விசாரணையில் இறந்த தகவலை வெளியே சொன்னால், துரையும் அதேபோல் கொல்லப்படுவார் என்று போலீசார் எச்சரித்ததாகவும், மகேந்திரனின் உடலை போஸ்ட் மார்ட்டம் கூட செய்யாமல், குடும்பத்தினரிடம் சாத்தான்குளம் போலீசார் ஒப்படைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017ம் ஆண்டில் ஆட்டோரிக்ஷா திருட்டு வழக்கில் கைதான ராஜாசிங் என்பவரை, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். பின் தட்டார்மடம் போலீஸ் ஸ்டேசனிலும் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். பின் அவர் அப்பகுதியில் நடைபெற்ற கொலை தொடர்பாக மற்ற ஏழு பேருடன் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் 16 வயது கூட ஆகாத மைனர் சிறுவனும் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். ஆனால், அவன் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டான் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

மாவட்ட நீதிபதி சரவணனிடம் ராஜாசிங் கூறியுள்ளதாவது, நான் பொய் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் கொண்டுவரப்பட்டேன். அங்கு போலீஸ் நண்பர்கள் என்ற பிரிவினர் என்னை கட்டிவைத்து, கை, கால், தலை உள்ளிட்டவைகளில் பயங்கரமாக தாக்கினர். அதோடு சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை கடுமையாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரிலேயே அவர்கள் என்னை கடுமையாக தாக்கினர் தனது இடது புட்டத்தில், ரத்தம் கசிந்த இடம் தொடர்பான போட்டோ தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக ராஜாசிங் தெரிவித்துள்ளார்.

தட்டார்மடம் போலீஸ் ஸ்டேசனில் தன்னை துன்புறுத்தியதாக போலீசார் கணேஷ் மற்றும் மகாராஜன் மீது ராஜாசிங் புகார் அளித்துள்ளார்.
தனது அந்தரங்க பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து அடித்தால், அப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக, தான் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு அனுப்பப்பட்டதாக ராஜாசிங் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில், விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஆண்கள் அங்குள்ள போலீசாரால் கடுமையாக தாக்கப்படுகின்றனர். போலிஸ் விசாரணையின் போது தாங்கள் தாக்கப்படவில்லை என்று நீதிபதியிடம் கூற அவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதற்காக, அவர்கள் நீதிபதி முன் நிறுத்தப்படும்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளி தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்சும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலேயே நீதிபதி சரவணன் முன் ஆஜர்படுத்தப்பட்டிருந்தாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
கோவில்பட்டி கிளைச்சிறையில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் மனித உரிமை அத்துமீறல்கள் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து சிறைத்துறை, அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அது இங்கு கடைபிடிக்கப்படவில்லை. மேலும் சிறைகளில் கைதிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்துதரப்படவில்லை.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கடந்த 20ம் தேதி, உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே கோவில்பட்டி சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். இரண்டு நாட்களுக்குள்ளாக அவர்கள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை ஊடகங்களின் மூலமாகவே தான் தெரிந்துகொண்டதாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை சென்றுகொண்டிருப்பதால் பதிலளிக்க மறுத்துவிட்டார். போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர்கள் தொடர்பு எல்லைக்கு வரவில்லை.

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் லாக்கப் மரணம் இல்லையென்றும், அவர்கள் போலீஸ் விசாரணையின் போது இறக்கவில்லை என்றும், சிறையில் இருந்தபோதே மரணமடைந்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப வழக்கறிஞர் பி.எம். விஷ்ணுவர்தன் கூறியதாவது, ராஜாசிங்கின் விவகாரமே தன்னை இந்த வழக்கில் சட்டரீதியாக வாதாட தூண்டியது. சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அறை, முதல்மாடியில் உள்ளது. அதற்கருகில் 4 அறைகள் உள்ளன. இந்த அறைகளிலேயே, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ராஜாசிங் உடல்நிலை தேறியுள்ளதால், மகேந்திரன் மரணம் குறித்தும் நீதிவிசாரணை குழு தாக்கல் செய்யும் அறிக்கை மீது வாதம் வைக்கப்படும் என்று விஷ்ணுவர்தன் மேலும் தெரிவித்துள்ளார்.