பொது முடக்கநிலை காலத்தில் பழக்கப்படுத்தப்பட்ட ஆன்லைன் கற்றல், ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்பும் தொடரலாம் என்று நம்பப்படுகிறது. Brainly எனும் நிறுவனம் வெளியிட்ட கணக்கெடுப்பில், 38.7 சதவீத மாணவர்கள் மட்டுமே ஊரடங்கிற்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தனர் .
பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கிய பின், ஆன்லைன்/ ஆஃப்லைன் என இரண்டிலும் கல்வி கற்க சுமார் 53.3 சதவீத மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதேசமயம், 42.5 சதவீதம் பேர் ஆன்லைன் கல்வி முறையில் தொடர்ந்து தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு குறைவான (28.7%) மாணவர்கள் இன்னும் அதுகுறித்த முடிவுகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கற்றல் தளத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மையான மாணவர்கள் (55.2 சதவீதம்) தங்கள் வகுப்புகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஆன்லைன் கல்வி முறையில் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்வதாக மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. நெட்வொர்க் மற்றும் இணைய வசதி சிக்கல்களால் கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக் கல்வி இன்னும் எட்டாத கனியாகவே உள்ளது.
உகந்த சூழல் இருந்தால் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு இந்தியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்பு கூறியிருந்தார்.
முன்னதாக, ஆன்லைன் மூலம் பாதுகாப்பான கல்வி கற்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே அதிகரிக்கும் வகையில், ‘’கோவிட்- 19 காலகட்டத்தில் பாதுகாப்பான ஆன்லைன் கற்றல்’’ என்னும் தலைப்பிலான தகவல் கையேட்டை அமைச்சர் வெளியிட்டார். இந்தக் கையேட்டை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) மற்றும் யுனெஸ்கோவின் புதுதில்லி அலுவலகம் உருவாக்கியுள்ளன. இந்தக் கையேடு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஆன்லைன் அடிப்படையான எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைப் போதிக்கும். இது பெற்றோருக்கும், கல்வி கற்பிப்பவர்களுக்கும் குழந்தைகள் எவ்வாறு இணையதளத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதைக் கற்பிக்க உதவும்.