வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 29 விமானங்கள் மூலம் 26 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்படுவர் எனவும் மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன, வந்தே பாரத் அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம் உள்ளதா, நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது எனக் குறிப்பிட்டார்.
அதேபோல, விமானங்கள் தரையிறங்க அனுமதியளிப்பது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டையும் தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த விசாரணையின் போது, மத்திய அரசு, 26,368 பேர் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்னும் 29 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 26 ஆயிரம் பேர் மீட்கப்படுவர் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் பதில்மனு கிடைக்கப் பெறாததால், வழக்கின் விசாரணையை நீதிபதிகள், வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.