வியாழன், 25 ஜூன், 2020

இஸ்லாமாபாத்தின் முதல் இந்து கோயில்: ரூ.10 கோடி செலவை ஏற்ற பாகிஸ்தான் அரசு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான முதல் இந்து கோயில் அமையவுள்ளது. 

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்துக்கள் கடவுகளை வழிபடுவதற்கு வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் ஹெச்-9 பகுதியில் 20,000 சதுர அடியில் இந்து கோயில் அமையவிருக்கிறது. இதற்கான செலவு ரூ.10 கோடியை பாகிஸ்தான் அரசே ஏற்றுள்ளதாக அந்நாட்டு மத விவகாரத்துறை அமைச்சர் பிர் நூருல் ஹக் காத்ரி தெரிவித்துள்ளார். 

இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து இந்த கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என பெயர் வைத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற மனித உரிமைகள் செயலாளர் லால்சந்த் மால்ஹி கலந்து கொண்டார். பிரதமர் இம்ரான்கானின் அனுமதியின்படி, கோயில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மல்ஹி, ‘இஸ்லாமாபாத் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் 1947ம் ஆண்டுக்கு முந்தைய கோயில்கள் காணப்பட்டன. ஆனால் காலப்போக்கில் அந்த கோயில்கள் கைவிடப்பட்டு பயன்படுத்தப்படாமல் போனது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களுக்காக கோயில்கள் கட்டுவது அவசியமாகியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இஸ்லாமாபாத்தில் கோயில் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே, எரியூட்டும் மயானமும் அமைக்கவிருக்கின்றனர். இந்துக்களுக்கான மயானத்திற்கும் அங்கு பற்றாக்குறை இருப்பதால் இந்த புதிய மயானத்தை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.