உலக அளவில் அதிகமாக பக்தர்கள் வருகை புரியும் ஒரு நிகழ்வாக இருக்கிறது ஹஜ் புனித பயணம். ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கும் இந்த புனித பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பலவும், இந்த ஆண்டு புனித பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தங்கள் மக்களிடம் கேட்டுக் கொண்டது. அரேபிய நாடுகள் பலவும் சௌதியின் இறுதி முடிவிற்கு காத்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில் சௌதி அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திங்கள் கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் ஹஜ் புனித பயணம் சவுதி மக்களுக்கு மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பிட்ட குடிமக்களுக்கு, சமூக இடைவெளியை பின்பற்றினால், மட்டுமே புனித பயணம் மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளது அந்நாட்டு அரசு. மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள தடை என்பது நவீன வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் மட்டும் 1,60,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,307 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்தின் மூலம் ஆண்டு வருமானமாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.