சனி, 27 ஜூன், 2020

பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவதா?


சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள்,  உள்திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் உயிரிழப்புகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


”போலீசாரின் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது மிகவும் சோகமான ஒன்று. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் மரணத்திற்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் JusticeForJeyarajAndFeni’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுதவிர, எண்ணற்ற திரை பிரபலங்கள் இச்சம்பவத்தை கடுமையாக விமர்சித்து சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், இச்சம்பத்திற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதவிர நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவா, ஷாந்தனு, விஷ்ணு விஷால், இயக்குனர்கள் சீனு ராமசாமி, கார்த்திக் சுப்பராஜ், பா.ரஞ்சித், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.