தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பில் சென்னையை அடுத்து அதிகபட்சமாக மதுரை , திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 25 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கபட்ட உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 87 கோவிட்-19 பரிசோதனை மையங்களில் நேற்று அதிகபட்சமாக 26,592
மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 204 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 30 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் நேற்று 37 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை அடுத்து இன்று அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 157 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 139 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 120 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 120 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 62 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 51 பேருக்கும், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,358 பேர் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,178 ஆக உள்ளது.