வெள்ளி, 26 ஜூன், 2020

விசாரணை கைதிகளை காவல் தடுப்பு மையங்களில் விசாரிக்க வேண்டும் - டிஜிபி திரிபாதி உத்தரவு

கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் மரணத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர், மாவட்டந்தோறும் தற்காலிக காவல் தடுப்பு மையங்களை அமைக்கவும், டிஜிபி அறிவுறுத்தி உள்ளார். 

தொற்று அதிகரித்துள்ள நிலையில், விசாரணை கைதிகளை கவனமாக கையாள வேண்டும், என அறிவுறுத்தியுள்ள அவர், காவல் நிலையங்களில் வைத்து யாரையும் விசாரிக்கக் கூடாது என்றும், காவல் தடுப்பு மையங்களில் வைத்து விசாரிக்கலாம், எனவும் கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குகளை முடித்து ஜாமீன் வழங்கவும், ஜாமீனில் வரமுடியாத விசாரணை கைதிகளுக்கு, கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களில், யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரை அழைத்து வந்தவர்கள், விசாரித்த காவல் அதிகாரிகள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், என டிஜிபி உத்தரவில் தெரிவித்துள்ளார்.