திங்கள், 22 ஜூன், 2020

இந்திய வீரர்கள் உயிர்த் தியாகத்திற்கு, நியாயம் கிடைக்காவிடில் அது வரலாற்று துரோகம் ஆகிவிடும்: மன்மோகன் சிங்

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் செய்த உயிர்த் தியாகத்திற்கு, நியாயம் கிடைக்காவிடில் அது வரலாற்று துரோகம் ஆகிவிடும் என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

சீன விவகாரத்தில், மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்து, காங்கிரஸ் தலைவர்கள் தினமும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, மன்மோகன் சிங், பிரதமர் மோடி தனது வார்த்தைகள், எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகவும் கவனமாக பேச வேண்டும், என தெரிவித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், உயிரிழந்த நமது ராணுவ வீரர்கள், கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காப்பதற்காக போராடியுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாகத் குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், இதன் மூலம் வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர், என்றும் தெரிவித்துள்ளார். தேசத்தின் பாதுகாப்பைக் கருதி பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், எடுக்கும் முடிவுகளையும், மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.