ஞாயிறு, 28 ஜூன், 2020

கடந்த ஆண்டு மார்ச் மாதமே கழிவுநீரில் கொரோனா… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கழிவுநீர் மாதிரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதமே கொரோனா வைரஸின் மரபணு இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 


கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியலாம் என கண்டுபிடித்தனர். 

கழிவுநீரில் கொரோனா:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் கழிவுகளில் வைரஸ் தொற்று இருக்கும் என்றும், அதன் மூலம் தொற்றை கண்டறிய முடியும் எனவும் கூறினர். மேலும் கழிவுநீர் மூலமும் கொரோனா அதிக அளவில் பரவியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆராய்ச்சியை பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. 


ஸ்பெயினில் ஆராய்ச்சி:

ஸ்பெயினில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கழிவுநீரில் கொரோனா வைரஸின் மரபணு இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்சிலோனாவில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 41 நாட்களுக்கு முன்பாக கடந்த ஜனவரி 15ம் தேதி கழிவுநீரில் வைரஸை கண்டறிந்தனர். 

அதன்பிறகு பார்சிலோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2019 வரையிலான கழிவுநீர் மாதிரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மார்ச் 12, 2019ல் சேகரிக்கப்பட்ட மாதிரியில் கொரோனாவின் மரபணு இருந்ததாக கூறுகின்றனர்.

 


மதிப்பாய்வுக்காக ஆராய்ச்சி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனை உறுதிப்படுத்துவதற்கும், ஆய்வில் ஏதாவது தவறு உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்கும் அதிக ஆய்வுகள் தேவைப்படும் என கூறியுள்ளனர். 

கொரோனா வைரஸின் செயல்பாடுகள் தொடர்பான தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்காததால் இந்த ஆய்வில் சில பிரச்சனைகள் இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயினில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கொரோனா வைரஸ் மரபணு கண்டறிப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், நாம் நினைத்ததை விட முன்னதாகவே இந்த நோய் தோன்றியிருக்கக் கூடும்.