அனைத்து தொழிற்துறைகளும் முடக்கம் கண்டு, நாளை என்ன என்ற கேள்வியுடன் செல்லுகின்ற நிலையில், ஜவுளித்துறைக்கும், கைத்தறி நெசவு துறைக்கும் அழிவே இல்லை என்று கூறுகிறார் சிறுமுகை பட்டு நெசவாளி காரப்பன். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கான சிறப்பு பேட்டியில் அவர் பேசியது ஆச்சரியத்தை வரவழைக்கிறது. 70 வயதாகிறது, ஆனாலும் துடிப்பும் கணிவும் கொண்ட இளைஞனாக, இன்னும் ஆயிர கணக்கான மக்களுக்கு நெசவு கலையை கற்றுக் கொடுக்க துடிக்கும் கலைஞனாக நம்மிடம் உரையாடுகிறார் காரப்பன்.
நெசவு குறித்து விழிப்புணர்வு தேவை!
இன்று உணவுக்கு அடுத்த முக்கியமான தேவை என்ன? இன்னும் 100 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இது அநாவசியம் என்று நாம் உடுத்திக் கொள்ளும் ஆடை நிராகரிக்கப்படுமா? மற்ற தொழில்கள் எல்லாம் முடங்கியிருக்கின்ற நிலையில், ஞாயிற்றுக் கிழமை கூட இங்கு மக்கள் கூட்டம் அளவு கடந்து இருக்கிறதே! அதுவும் கைத்தறி சேலையை வாங்க… இந்த தொழில் அழியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அல்லது கைத்தறி நெசவளார்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கின்றீர்களா? இரண்டு நாளைக்கு ஒரு முறை ரூ. 1500க்கு என்னால் நெசவு செய்ய முடியும். அப்படி என்றால் என் மாத சம்பளம் என்னவென்று யோசியுங்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளுடன் நம்மை வரவேற்றார் காரப்பன்.
காரப்பன் குறித்து அதிக அறிமுகம் தேவையில்லை என்று தான் நினைக்கின்றேன். நெசவு குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் கேள்வி எழுப்பி, தேசிய ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தினார் சிறுமுகை மென்பட்டு புடவைகளை விற்பனை செய்யும் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் காரப்பன்.
மேட்டுப்பாளையம் அருகே இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் நெசவாளர் கிராமம் தான் சிறுமுகை. பவானி நதி தவழ்ந்து செல்லும் பகுதியில் பசுமையை தவிர பார்ப்பதற்கு ஏதும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காஞ்சி, ஆரணி, ராசிபுரம் தவிர்த்து பிற பகுதிகளில் பட்டு நெசவு என்பதே இல்லை. சிறுமுகையில் பருத்தி நெசவு 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாங்க செட்டி மற்றும் ஒக்கலிக கவுடர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் வறுமையும் பசியும் தான் மிச்சம் என்ற சூழல் தான் ஓயாத உழைப்பிற்கு கிடைத்த பரிசு.
மேலும் படிக்க : வறுமையும் வயோதிகமும் சேவைக்கு தடையில்லை: வாழும் உதாரணமாக கமலாத்தாள் பாட்டி
கோரா காட்டன் (Silk) வருகையால் ஏறுமுகம் கண்ட சிறுமுகை
1970 சமயங்களில் சமயத்தில் பெங்களூரு பட்டுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வறுமை சூழலால் வேலை தேடி 1977ம் ஆண்டு பெங்களூருக்கு சென்றார் காரப்பன். ஒரு வீட்டில் பட்டு நெசவின் தொழில் நுட்பங்களை கற்ற அவர், சிறுமுகையில் இருந்து மேலும் 50 குடும்பங்களை அழைத்து சென்றார். சிறிது காலம் அங்கே பணியாற்ற அவர் திரும்பி வந்து பருத்தியையும் பட்டையும் இணைத்து கோரப்பட்டு புடவைகளை 1980ல் இருந்து நெய்ய துவங்கினார்.
அவரவர் வீடுகளில் இருந்து நெய்யப்படும் புடவைகளை ஏஜெண்ட்டுகள் வாங்கிச் சென்று கோவையின் பல்வேறு பகுதிகளில் விற்க துவங்கினார்கள். ஆனால் காரப்பன், இதையும் நாமே ஏன் செய்யக் கூடாது என்று யோசித்து, ரீட்டைல் ஷாப்பை திறந்தார் காரப்பன். 1995-96 சமயங்களில் இப்பகுதியில் மென்பட்டு தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்தது. இன்று சிறுமுகை என்றதும் அதன் ஒருமித்த அடையாளமாக மாறியிருக்கும் காரப்பன், ஒக்கலிக கவுடர் சமுதாயத்தை சேர்ந்தவர். 9 வயதில் மாடு மேய்க்க சென்றார். 12 வயதில் தறியில் வேலை செய்ய ஆரம்பித்தார். எழுத படிக்க தெரியாத காரப்பனின் 2 புத்தகங்கள் ”கைத்தறி நெசவு“, “கைத்தறி களஞ்சியம்” இன்று நெசவு தொழிலின் பல்வேறு நுணுக்கங்கள் பற்றி பேசுகிறது.
சிறுமுகை மென்பட்டின் தனித்தன்மைகள்
நூலிழைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள பசை பயன்படுத்தியே நெசவு செய்யப்பட்டது. ஆனால் சிறுமுகை பகுதியில் பசைக்கு பதிலாக வெறும் நீர் கொண்டு நெசவு செய்யப்படுகிறது. காஞ்சி பட்டு போன்று அதிக எடை இல்லாமல், எளிமையாக பராமரிக்க கூடிய ஒரு புடவையாக சிறுமுகை பட்டுகள் இருக்கின்றன.
காஞ்சிபுரம் பட்டுப்புடவை ஒன்றின் எடை தோராயமாக 1 கிலோ இருக்கும் என்றால் சிறுமுகை மென்பட்டின் எடை 600 கிராம் தான். ஆனால் காஞ்சிபுரத்தில் ஒரு மாதத்திற்கு மூன்று முதல் நான்கு பட்டுப்புடவைகள் நெசவு செய்யப்படுகின்ற நிலையில் இங்கு சராசரியாக ஒரு நெசவாளி ஒரு மாதத்திற்கு 15 முதல் 20 புடவைகளை நெய்கிறார். அதனால் தான் காஞ்சிபுரத்தைக் காட்டிலும் சிறுமுகையில் 2 மடங்கு பட்டின் தேவை இருக்கிறது.
இதன் எடை, நாள் முழுவதும் உடுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும் தன்மை மற்றும் அனைத்து நாளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் இப்பகுதி பட்டுப்புடவைகளுக்கு தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்தது. ராகங்கள் முடிவதில்லை, தென்பாண்டி சீமையிலே போன்ற படங்களில் சிறுமுகை பட்டின் பயன்பாடு இருந்தது. தமிழ் சினிமா மூலம் சிறுமுகை பட்டு ஒரு புது வெளிச்சத்தை வியாபாரத்தில் கண்டது.
கைத்தறி தொழில் குறித்து போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை – காரப்பன்
கைத்தறி தொழில் மறைந்து வருகிறது, கைத்தறி நெசவு செய்யும் மக்கள் பசி, பஞ்சம், பட்டினியால் தினமும் செத்து மடிகிறார்கள் என்று தவறான, சித்தகரிக்கப்பட்ட செய்திகள் தான் மக்கள் மத்தியில் உலவி வருகிறது. காஞ்சீவரம் படத்தில் நெசவாளி கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக காட்டப்படுகிறார். ஆனால் இன்று ஏதேனும் ஒரு நெசவாளி திருடினான் என்றோ, கொள்ளை அடித்தான் என்றோ ஏதேனும் காவல் நிலையத்தில் நிற்கிறார்களா? ஏன் என்றால் எங்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. சில நேரங்களில் எங்களுக்கான பிரச்சனையை பொதுப்படுத்தி அதற்காக நாங்கள் போராடுவதில்லை. அதனால் எங்களின் பிரச்சனை குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் கைத்தறி தொழில் அழிந்து போகும் என்பது முற்றிலும் தவறான கருத்து.
விசைத்தறி குறித்து?
சிலர் விசைத்தறி தொழிலை ஒழித்தால் கைத்தறி நிலைத்து நிற்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. ஏன் என்றால் இங்கு 60 கோடி பெண்களுக்கு தேவையான ஆடைகளை நெசவு செய்து கொடுக்க போதுமான நெசவாளிகள் கிடையாது. அதே போன்று அனைத்து பெண்களாலும் ரூ. 1500-க்கு மேல் செலவு செய்து ஒரு காட்டன் புடவையை வாங்கவும் இயலாது. இரண்டு தரப்பும் செயல்பட வேண்டும். இரண்டும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும்.
நெசவாளிகள் சந்திக்கும் பிரச்சனையாக நீங்கள் எதை பார்க்கின்றீர்கள்?
இருப்பதிலேயே மிகவும் கடினமான நெசவு ஜமுக்காளம் நெய்வது தான். அதற்கடுத்து படுக்கை விரிப்பு. பிறகு பருத்தி சேலை. ஆனால் இருப்பதிலேயே மிகவும் எளிமையான முறையில் நெய்யப்படுவது பட்டு தான். என்னுடைய வாழ்வில் நான் 40 வருடங்கள் நெசவு ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளேன். சேலம் கைத்தறி கல்லூரி மற்றும் மத்திய நெசவு வாரியத்தில் உறுப்பினராக இருந்து தமிழகம் முழுவதும் பயணித்து நெசவு குறித்து பாடங்கள் எடுத்துள்ளோன். பலருக்கும் நெசவின் நுணுக்கங்கள் கற்றுக் கொடுத்துள்ளேன்.
பிரச்சனை என்னவென்றால், இங்கு அனைத்து நெசவாளிகளும் ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெசவு செய்வதில்லை. அதனால் தான் இங்கு எங்களுக்கு மத்தியில் இருக்கும் பிரச்சனையும் மாறுபடுகிறது. அதனால் ஒரு குழுவாக இணைந்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது கொஞ்சம் சிக்கலான காரியமாக இருக்கிறது.
விவசாயிக்கு ஏதேனும் பண உதவி தேவை என்றால் நபார்ட் வங்கிக்கு சென்று கடன் வாங்குவார். ஆனால் எங்களுக்கு அப்படி என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை.
நெசவாளிகளை உருவாக்கும் வழிமுறைகள் என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஏன் என்றால் இன்று 40 வயதிற்கும் குறைவான நெசவாளிகளை நெசவு துறையில் சந்திப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. ஜவுளித்துறை சார்ந்த எந்த கல்வி நிறுவனத்திலாவது நெசவு தொழில் தெரிந்த ஒருவர் பயிற்றுநராக இருக்கிறாரா? இல்லை. சில்க் போர்டிலும் கூட நெசவு தெரிந்த ஒருவரும் இல்லை.
எந்த பள்ளி, கல்லூரி, அல்லது பல்கலைக்கழகம் நெசவு தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக வைத்துள்ளது? அதற்கும் நம்மிடம் பதில் இல்லை.
இங்கு துணி எடுக்க வரும் பெண்களில் எத்தனை நபர்களுக்கு தாங்கள் வாங்கும் புடவையின் நீளம், அகலம், எடை மற்றும் எதற்காக அவ்வளவு விலை தருகிறார்கள் என்று தெரியும்? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு கைத்தறி புடவை அதன் உற்பத்தியாளரிடம் தன் பயணத்தை துவங்கி வாடிக்கையாளரின் கையில் சென்று சேரும் வரை 1318 தனி நபர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.
இன்று இந்திய சீன எல்லைப் பகுதியில் பிரச்சனை. பலரும் அங்கிருந்து இறக்குமதியாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பற்றி தான் கவலை தெரிவிக்கின்றார்கள். முழுக்க முழுக்க சீனாவையே நம்பியிருக்கும் இந்திய பட்டுத்துறையின் நிலைமை குறித்தும், இந்த தனிநபர்களின் வாழ்வாதாரம் குறித்தும் விவாதிக்க இன்று ஊடகங்கள் தயார் நிலையில் இல்லை என்று கூறுகிறார் காரப்பன்.
நெசவுக்கென்று ஒரு கல்வி நிறுவனம்
ஒரு தொழில் ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் தான் நெசவு கலை தெரிய வேண்டும் என்ற அடிப்படை எண்ணமே தவறாக இருக்கிறது. மதுரை, தேனி பகுதிகளில் சௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்கள் நெசவு செய்கிறார்கள். இந்த பகுதியில் தேவாங்க செட்டியார்கள் அதிக அளவு நெசவு தொழில் செய்கிறார்கள். ஆனால் கைத்தறி நெசவே இல்லாத பகுதிகளுக்கு இந்த கலையை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. இதே கலையை நான் மற்ற வகுப்பினருக்கு எடுக்க விரும்புகிறேன் என்றால் முதல் எதிர்ப்பு எங்கள் பகுதி மக்களிடம் இருந்தே வரும்.
ஆனால் கள்ளக்குறிச்சியில் இருந்து சுதா என்பவர் நேரடியாக வந்து நெசவு கற்றுக் கொள்கிறார். இரண்டு வாரங்களில் அவரால் முழுமையாக ஒரு புடவையை நெய்திட முடியும். திருநெல்வேலியில் இருந்தும் நெசவு கற்றுக் கொள்ள தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. நாங்கள் விரைவில் நெசவு தொழில் நுணுக்கத்தை வளரும் இளம் பருவத்தினருக்கு கற்பிக்கும் வகையில் சிறுமுகையில் ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்க உள்ளோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் 50 நபர்களுக்கு நெசவு கற்றுத் தர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நெசவின் பின்னாள் நெய்யப்படும் சிறுமுகையின் பொருளாதார வளர்ச்சி
பட்டு முழுக்க முழுக்க சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கே நெசவிற்கு வருகிறது. பட்டுநூல் விற்பனையாளரிடம் இருந்து தேவைக்கு ஏற்ப பட்டுநூல்களை வாங்கும் நெசவாளர்கள் சில நேரங்களில் 10 புடவைகளுக்குமான வார்ப்புகளுடன் தங்களின் பணியை துவங்குகிறார்கள். சிறுமுகை அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நெசவு தொழிலை மட்டுமே நம்பி கிட்டத்தட்ட 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதே பகுதியில், புடவைக்கு தேவையான டிசைன்களை உருவாக்கும் ஜக்கார்ட் பணிகளும் ஒருபுறம் மும்பரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தறியில் ஏதேனும் பிரச்சனை என்றால் நெசவளாரே அதனை சரி செய்து கொள்ள இயலும். இல்லாத பட்சத்தில் தறி பிரச்சனைகளை சரி செய்யும் ஆசாரிகளும் நெசவை நம்பி வாழ்கின்றனர். கொரோனா பிரச்சனை ஏதும் இல்லை என்றால் மாதத்திற்கு சராசரியாக ரூ. 50 கோடி புழக்கம் இங்கு உள்ளது. இடமாக சிறுமுகை விளங்குகிறது. நாங்கள் எங்கும், எப்போதும் சிறுமுகை நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றார்கள் என்று கூறியதே இல்லை.
நெசவில் இன்றைய தேவை என்ன?
நெசவு தொழிலில் இருக்கும் வேலை வாய்ப்பு குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். நெசவு தொழிலை கற்றுக் கொடுக்க இங்கு இருக்கும் அமைப்புகள் முன் வர வேண்டும். வயது மற்றும் சாதிய பாகுபாடுகள் கடந்து நெசவினை கற்றுக் கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும். நெசவு செய்தால் நஷ்டம் அடைவான் என்ற எண்ணமே தவறு. தவறான விளம்பரங்கள் இளைஞர்களை தவறாக சிந்திக்க வைக்கிறது. இதே துறையில் 10 கோடிக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இருக்கிறது. இளைஞர்களுக்கு தேவையான, சரியான வழிநடத்துதல் கிடைத்தால் நெசவு தொழில் என்பது கலையாக மாறும். காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று கூறினார் காரப்பன்.