sathankulam jayaraj and Bennicks death cctv footage : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் லாக்அப் மரணம் சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளும், சம்பந்தப்பட்ட போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்களும் முரண்பாடுகளாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த இரண்டு மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று (30.6.20) இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்த தகவல்களுக்கு மாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது காவல் துறையினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்தது தொடர்பாக போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், அவர்கள் கடையை இரவு 9 மணிக்கு மேல் நிர்ணயித்த நேரத்தை தாண்டி திறந்து வைத்திருந்ததாக கூறியிருந்தனர். மேலும், அவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்த போது இருவரும் சண்டையிட்டதாகவும், தரையில் உருண்டு பிரண்டு போலீசாருடன் செல்ல மறுத்து போராட்டம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளியான சிசிடிவி காட்சியில் இதுப்போன்ற எந்த சம்பவங்களும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. கூடவே, ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருக்கின்றனர்.மேலும், அவர்கள் இருவரும் போலீஸார் கைது செய்தபோது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை, போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை.
CCTV footage near the mobile shop run by the late Bennicks in #Sathankulam contradicts the FIR report. The footage shows #JayarajandBennicks never resisted police arrest, there were no arguments, they didn't roll on the floor and sustain internal injuries as FIR claimed.
வெளியே நின்றுக் கொண்டிருக்கும் ஜெயராஜ் முதலில் போலீசார் வந்து விசாரிக்கும் போது பதில் கூறுகிறார். சிறிது நேரம் கழித்து, அந்த போலீசார் ஜெயராஜை அழைக்கிறார்கள். அவர் வேகமாக சென்று அவர்களிடம் மீண்டும் பேசுகிறார். தந்தை ஓடியதை கண்டு கடைக்குள் இருந்த பெனிக்ஸ் உடனே வெளியே வருகிறார். அதன் பின்பு, ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இருவரும் நல்ல நிலையில் இயல்பாக நடந்தே செல்கின்றனர். இதன் மூலம் இருவரும் அன்று இரவு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகே காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த வீடியோ காட்சி சாத்தான்குளம் போலீஸாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.