திங்கள், 29 ஜூன், 2020

வந்தே பாரத் திட்டத்தின் 4ம் கட்டம்: ஜூலை 3 முதல் 170 சிறப்பு விமானங்கள் இயக்கம்!

வந்தே பாரத மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4ம் கட்டமாக வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 17 நாடுகளுக்கு சுமார் 170 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். 

இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் கடந்த மே மாதம் முதல் மூன்று கட்டங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்பிவருகின்றனர். கடந்த மே மாதம் முதல் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 


இந்நிலையில் 4 ஆவது கட்டமாக 17 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துவர வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 170 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
அதன்படி கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, பங்களாதேஷ், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன் மற்றும் வியட்நாம், உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் பயன்பெருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 38 விமானங்கள் இங்கிலாந்திற்கும், 32 விமானங்கள் அமெரிக்காவிற்கும், 26 விமானங்கள் சவுதி அரேபியாவிற்கும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தகக்து.

Related Posts: