கொரோனா பாதிப்பால் முகக்கவசங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் மாஸ்க்கை வடிவமைத்துள்ளது.
இந்த முகக்கவசத்தை Bluetoothவசதியுடன் செல்போனில் இணைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், நாம் பேசும் வார்த்தைகள் செல்போனில் அது மெசேஜாக மாறும். அதே போல வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் செல்போன் அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். மேலும் இதனை பயன்படுத்தி முகக்கவசம் அணிந்தவரின் ஒலி அளவை அதிகரிக்க முடியும். முக்கியமாக ஜப்பானிய மொழியிலிருந்து 8 மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து கொண்டு தொடர்பு கொள்வதற்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக Donut Robotics நிறுவன தலைமை செயலர் கூறுகையில், ‘ஒரு ரோபோவை உருவாக்க நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்தோம். கொரோனா வைரஸ் சமுதாயத்தை எப்படி மாற்றியமைத்துள்ளது என்பதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு தயாரிப்பை உருவாக்க அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டோம். கொரோனா தொற்றுநோயில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் அந்த தயாரிப்பு இருக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம்’ என கூறியுள்ளார்.
முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 5,000 ஸ்மார்ட் முகக்கவசங்கள் செப்டம்பர் மாதம் முதல் ஜப்பானில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு முகக்கவசத்தின் விலை 40 டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் அதிக அளவில் ஸ்மார்ட் முகக்கவசங்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.